என் நேற்றைய கவிதைகள்

தமிழ் வணக்கம்

தமிழ்ப் பெண்ணே தலைவணக்கம்
         உன் நினைவில் உயிர் துடிக்கும்.

 உன் பேரை உச்சரித்தால்
          உதட்டோரம் பூவாசம்!
நெஞ்சோடு இருப்பதெல்லாம்
          நீ மட்டும் நீமட்டும்.
உனக்கென்று வயதேது
         அதுஎன்றும் பதினாறு
உயிரிங்கு வாழாது
         உன்மூச்சு இல்லாது

(தமிழ்ப் )

நிலவைக் கரைத்துனக்கு
      நிறம் தந்ததாரோ? - என்
மனதைக் கரைப்பதற்கு
      திறம் தந்ததாரோ?
பூவெல்லாம் உன்வாசம்
       உன்வார்த்தை குயில் பேசும்
ஊரெல்லாம் உந்தோற்றம்
       உனை நினைத்தால் தேன்சொட்டும்

  (தமிழ்ப்)

நெருப்பிற்கேது திறம்
        என்னைச் சுடுவதற்கு?
வருத்தத்திற்கேது மனம்
        என்வாசல் வருவதற்கு?
கன்னிஉன் நினைப்பில்
        சுடுகாடு சொர்க்கமாகும்
மண்ணின் சொர்க்கமது
        உன்னொரு ஸ்பரிசமாகும்

(தமிழ்ப்)

உனைப்பேசும் நாவிற்குத்
        தேன்கூடு சொந்தம்.
உனைத்தொட்ட உதட்டிற்கு
        பூக்கூடை சொந்தம்.
உனைப்பார்த்த கண்ணிற்கு
        ஒளியென்றும் சொந்தம்
சொர்க்கம் சென்றுவர
        சிறகுண்டு என்றும்.

(தமிழ்ப் )

நீநடக்கும் பாதையெல்லாம்
       தென்றலது தெருக்கூட்டும்;
நீநடந்த வாசலெல்லாம்
        நிலாப்பூக்கள் பூத்திருக்கும்
பூப்பெண்நீ நடந்துவிட்டால்
       புதைகுழிக்கும் உயிர்பிறக்கும்
பாலையின் வாசலிலும்
       கங்கைநீர்த் துளிபிறக்கும்.

(தமிழ்ப்)

  உனைப்பாட முடியாமல்
       பாவேந்தன் களைத்துவிட்டான்
உன் அடிகாண முடியாமல்
       பாரதியும் மலைத்துவிட்டான்
ஒருபிறவி போதாத
       கவிமணியும் இனிபிறப்பான்.
மறுபிறவி போதாமல்
       மலைத்தேதான் உயிர்துறப்பான்.

(தமிழ்ப் )

நீலக்கட லெல்லை
     நான்நடந்தால் வந்துவிடும்
நினதெல்லை காண்பதெனில்
     பலஜென்மம் தீர்ந்துவிடும்.
கேட்கும் பொழுதெல்லாம்
     நீயெனக்கு கவிதந்தாய்
நீமட்டும் கேட்டுவிட்டால்
    உயிர்கூட நான் தருவேன்

(தமிழ்ப் )

 

Comments »

The URI to TrackBack this entry is: http://arulmurugan.blogsome.com/2006/05/03/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/trackback/

No comments yet.

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>