நட்சத்திரம் பொறுக்கிய தினங்கள்

 

நட்சத்திரம் பொறுக்கிய தினங்கள

அந்த நீண்ட இரவுகளில்
காட்டின் அந்தரங்கத்தில்
நீயும் நானும் ஓடி ஓடி
உதிர்ந்துவிழும் நட்சத்திரங்களைப்
பொறுக்கிக்கொண்டிருந்தோம்.

இன்னும் விடிவதற்கு
கொஞ்ச நேரம் தான்.

வானத்தின் மரம்
தன்னை குலுக்கிக்கொண்டு
சோம்பல்முறித்து எழும்போது
நிச்சயம் நிறைய
விண்மீன்கள் உதிரும்.

நீ உன்னிடம ஏற்கனவே்
நிறைய நட்சத்திரங்களைச்
சேர்த்து வைத்திருந்தாய்..

உதிர்ந்தது நட்சத்திரங்களா?
அல்லது உன் கண்மணிகளா?’
என்று நான் குழம்பி நிற்கையில்
சற்றுமுன் உதிர்ந்த அந்த நட்சத்திரத்தையும்
நீ உன் மடியில் சேர்த்துக்கொள்வாய் ..

ஒரு பெண்ணின் வாழ்க்கை
பாதைகளைப்பற்றி கவலைப்படாத
நதியின் வாழ்க்கை போலும்!

கரையில் நின்றுகொண்டு
நதியின் சுழியை ரசித்து
காலத்தைக் கரைப்பதோ
ஆணின் வாழ்க்கை!

இதோ உன் பைகளெல்லாம்்
நட்சத்திரங்களால் நிறைத்துவிட்டாய்.
இப்பொழுது உன் பாவாடையிலும்
பூக்கள் சேர்க்க ஆரம்பித்துவிட்டாய்.

நிறையாத பைகளோடு
வீடு திரும்புவதே எனக்கு
வழக்கமாகிவிட்டது.
அம்மாவிடம் உதை நிச்சயம்.

ஒவ்வொரு முறையும்
நினைத்துக்கொள்வேன் -
நிச்சயம் நாளையாவது
நீயில்லாத வேறுதிசையில்
பயணிக்கவேண்டும்.

ஆனால் விடிந்ததும்
தினம்தினம் உன்சுவடுகளைத்
தொடர்வதே வழக்கமாகிவிட்டது..

என் நேற்றைய கவிதைகள்்

காதலி நீயொரு போதிமர

(இந்த கவிதை தலைவனும் தலைவியும் உரையாடுவது போல அமையப்பெற்றது.)

 தலைவன
           
குயில் குரலோடு பிறந்தது!
            கடல் அலையோடு பிறந்தது
            முகிழ் பூவிதழோடு பிறந்தது
            நான் தமிழோடு பிறந்தேன்.
            நீ அமுதோடு பிறந்தாயோ? -இல்லை
           அழகோடு பிறந்தாயோ?

 தலைவி
           
மின்மினி வெளிச்சத்தோடு பிறக்கவில்லை.
            மின்மினி வெளிச்சமாகவே பிறந்தது.
            வானம்பாடி கானத்தோடு பிறக்கவில்லை
            வானம்பாடி கானமாகவே பிறந்தது.
            நான் அமுதோடு பிறக்கவில்லை
           அமுதமாகவே பிறந்தேன்.
           நான் அழகோடு பிறக்கவில்லை
          அழகின் உருவமாய்ப் பிறந்தேன்.

          வான்பூக்கள் தடாகத்தில்
          நிலவு ஒரு குவளைப்பூ
          பூமகளின் தோட்டத்தில்
          நானோ ஒரு குறிஞ்சிப்பூ

         நீ தென்றல் போல் சேதி
         சொல்ல வந்தாயோ? - இல்லை
         வண்டைப் போல் இதழுரச வந்தாயோ?

 தலைவன்
         குயிலுக்கு கவிசொல்ல வந்தேன்.
         நதிக்கொரு நடைசொல்ல வந்தேன்
         காற்றுக்கு வழிசொல்ல வந்தேன்
        அலைகளுக்கு கரைகாட்ட வந்தேன்.
        உனக்கொரு தமிழ்சொல்ல வந்தேன்.
         உன்சுடரில் வார்த்தையின்றி நின்றே
ன்.

 தலைவி
         விண்மீனின் வெளிச்சத்தில்
          நிலவுக்கேன் தடுமாற்றம்
          ஒருசொட்டு நீர்த்துளியால்
          கடலுக்கேன் முகமாற்றம்
          நானோர் மழைத்துளி
         புல்படிந்த பனித்துளி
         நீயோர் பெருங்கொண்டல்
         பூச்சொறியும் நந்தவனம்.

தலைவன்
        துளிமிகையால் அணைவுடையும்
        துளிப்பொறியால் காடழியும்
        நீயோர் தீப்பொறிதான!்
       நுனிப்புல்லின் நீர்த்துளி தான்!
       துளிப்பொறியின் பசியினிலே
       தூரெறிந்த காடானேன்
       மிகைத்துளியால் திசையிழந்த
       செடிகொடியின் சருகே நான்!
       நீ!
       பூப்பூக்கும் நேரத்தில்
       புன்னகைக்கக் கற்றாயோ?
       தேன்சுரக்கும் நேரத்தில்
       இதழுடுத்திக்கொண்டாயோ?
        நதிநடக்கும் வீதியிலே
        நடைபயின்று கொண்டாயோ?
        ரவிமுளைக்கும் நேரத்தில்
        கண்ணில் ஒளி பெற்றாயோ?

        சித்திரையும் முக்கனியும்
        சிங்காரச்செந்தமிழும்
        முற்றத்து நிலவொளியும்
        முகிழ்தூவும் நீர்த்துளியும்
        சற்றே நடைபயிலும்
        தெருவோரத்தென்றலதும்
        தொட்டில் தாலாட்டும்
        சுவையதனில் உன்னினமே

        பூவுதிரும் ஓசையிலும்
       துயில்கலைந்து எழுவாயே
       புல்னுனியின் பனித்துளியின்
       குளிர்தாங்க மாட்டாயே!
       தேய்ந்துவரும் நிலவிற்காய்
       தினம்கண்ணீர் விடுவாயே
       காய்ந்தமலர் பார்த்துவிட்டால்
       கணநேரம் மறிப்பாயே

        நதிவிழுந்த சருகாக
       உன்சுவடைத் தொடர்வேனெ!
       விரல்களைந்த நகமாக
       சுயம்மறந்து கிடப்பேனே!

 (தலைவனின் சுயத்தையறிய தலைவி கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாள். தலைவன் பதிலுரைக்கிறான்.)
தலைவி
       நீ காதலியைப் பார்த்த கண்களோடு
       எதைப்பார்க்க விரும்புகின்றாய்?
       நிலவையா, விண்மோனையா?

தலைவன்
       நிலவிற்கோ களங்கமுண்டு!
       வெண்மீனிற்கோ வெளிச்சமில்லை!

தலைவி
        நீ காதலியோடு பேசிய வாயோடு
        எதை உச்சரிக்க விரும்புகின்றாய்?
         தமிழையா, மௌனத்தையா?

தலைவன்
         காதலி பேசாத தமிழில் அமுதில்லை
         மௌனத்தில் தமிழுமில்லை

 தலைவி
          நீ காதலியைத்தொட்ட விரல்களோடு
          எதைத் தடவிப்பார்க்க விரும்புகின்றாய்?
          பூக்களையா, பனித்துளியையா?

தலைவன்
          பூக்களிலே குளிர்ச்சியில்லை!
          பனித்துளியில் மென்மையில்லை!

தலைவி
          நீ காதலியோடு வாழ்ந்தபின்
          எங்கே வாழ்ந்துபார்க்க விரும்புகின்றாய்?
          நந்தவனத்தின் மடியிலா, சொர்க்கத்திலா?

தலைவன்
          பூமடியில் அன்பில்லை!
          சொர்க்கத்தில் சுதந்திரமில்லை!

(தலைவனின் சுயமறிந்த தலைவி சந்தோஷமடைகிறாள். இப்பொழுது தலைவன் பேசுகிறான்.)

     காதலி நீயொரு போதிமரம் - உன்
     கண்ணொளி பார்த்திட ஞானம் வரும்.
     ஆயிரம் ஆயிரம் கோடி சுகம்
      உன் ஒரு தீண்டல் தேடித்தரும்

      காத்லொரு சுகமான மரணம் - தீக்குளிக்கும்
      விட்டிலுக்கே காதல்சுகம் தெரியும்
       காதலொரு இனிதான ஜனனம் -இதழ்விரிக்கும்
       மொட்டுக்கே காதல்மனம் புரியும்
       காதலொரு புதிரான பயணம்
        சுவடிழந்த வண்டுக்கே புரியும்
        காதலது உணர்வுகளின் நளினம்
        கவிஞனுக்கே காதல் வார்த்தை புரியும்!

என் நேற்றைய கவிதைகள்

தமிழ் வணக்கம்

தமிழ்ப் பெண்ணே தலைவணக்கம்
         உன் நினைவில் உயிர் துடிக்கும்.

 உன் பேரை உச்சரித்தால்
          உதட்டோரம் பூவாசம்!
நெஞ்சோடு இருப்பதெல்லாம்
          நீ மட்டும் நீமட்டும்.
உனக்கென்று வயதேது
         அதுஎன்றும் பதினாறு
உயிரிங்கு வாழாது
         உன்மூச்சு இல்லாது

(தமிழ்ப் )

நிலவைக் கரைத்துனக்கு
      நிறம் தந்ததாரோ? - என்
மனதைக் கரைப்பதற்கு
      திறம் தந்ததாரோ?
பூவெல்லாம் உன்வாசம்
       உன்வார்த்தை குயில் பேசும்
ஊரெல்லாம் உந்தோற்றம்
       உனை நினைத்தால் தேன்சொட்டும்

  (தமிழ்ப்)

நெருப்பிற்கேது திறம்
        என்னைச் சுடுவதற்கு?
வருத்தத்திற்கேது மனம்
        என்வாசல் வருவதற்கு?
கன்னிஉன் நினைப்பில்
        சுடுகாடு சொர்க்கமாகும்
மண்ணின் சொர்க்கமது
        உன்னொரு ஸ்பரிசமாகும்

(தமிழ்ப்)

உனைப்பேசும் நாவிற்குத்
        தேன்கூடு சொந்தம்.
உனைத்தொட்ட உதட்டிற்கு
        பூக்கூடை சொந்தம்.
உனைப்பார்த்த கண்ணிற்கு
        ஒளியென்றும் சொந்தம்
சொர்க்கம் சென்றுவர
        சிறகுண்டு என்றும்.

(தமிழ்ப் )

நீநடக்கும் பாதையெல்லாம்
       தென்றலது தெருக்கூட்டும்;
நீநடந்த வாசலெல்லாம்
        நிலாப்பூக்கள் பூத்திருக்கும்
பூப்பெண்நீ நடந்துவிட்டால்
       புதைகுழிக்கும் உயிர்பிறக்கும்
பாலையின் வாசலிலும்
       கங்கைநீர்த் துளிபிறக்கும்.

(தமிழ்ப்)

  உனைப்பாட முடியாமல்
       பாவேந்தன் களைத்துவிட்டான்
உன் அடிகாண முடியாமல்
       பாரதியும் மலைத்துவிட்டான்
ஒருபிறவி போதாத
       கவிமணியும் இனிபிறப்பான்.
மறுபிறவி போதாமல்
       மலைத்தேதான் உயிர்துறப்பான்.

(தமிழ்ப் )

நீலக்கட லெல்லை
     நான்நடந்தால் வந்துவிடும்
நினதெல்லை காண்பதெனில்
     பலஜென்மம் தீர்ந்துவிடும்.
கேட்கும் பொழுதெல்லாம்
     நீயெனக்கு கவிதந்தாய்
நீமட்டும் கேட்டுவிட்டால்
    உயிர்கூட நான் தருவேன்

(தமிழ்ப் )

 

பூட்டியவீட்டிற்குள் நீ சந்தோஷமாயிரு

சுந்தர காண்டம்

எனது உலகமும்
குழந்தைகளின் உலகமும்
ஒன்றாயிருந்தது.

ஒவ்வொரு இரவும்
நான் மேகங்களின் மடியில்
நட்சத்திரங்களின் தாலாட்டில்
உறங்கிக்கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு விடியலையும்
தென்றல் தான்
கதவைத்தட்டி எனக்கு
அறிமுகம் செய்துவைத்தது

எனது அறைகளின்
மேற்சுவற்றில்
மின்விசிறிகள் இல்லை
- ஏதோ ஒரு வண்ணத்துப்பூச்சி
எப்பொழுதாவது சிறகுகளை
காயப்படுத்திக்கொள்ளலாம்.

எனது அறையில்
கூண்டில்லாத தீபங்களுக்கு
அனுமதியில்லை
- அறியாத விட்டில் பூச்சிகள்
தீக்கனியைப் பறிக்க நினைத்து
உயிர்மலரை உதிர்த்துவிடலாம்.

எனது சன்னல்கள்
எப்பொழுதும் திறந்தேயிருந்தன
-இரவில் வழி தவறியபறவைக்கு
கூடு தேவைப்படலாம்.

எனது அறையில்
இரவில் அதிக நேரம்
விளக்குகள் எறிவதில்லை
-பக்கத்து மர பறவைகள்
கூடல் கொள்ள வெட்கப்படலாம்.

என் பாதைகளுக்கு
மின்மினிகள் வெளிச்சம் பிடித்தன.

என் இரவுக் கூரையினை
நட்சத்திரங்கள் அலங்கரித்தன.

நான் செய்யவேண்டியவைகளை
ஏதோ ஒரு பறவையின் பாடல்
ஞாபகப்படுத்தியது.

மரங்களின் கிளைகளில்
நானும் ஒரு பறவையைப்போல
வாழ்ந்துகொண்டிருந்தேன்.
-எனது ஒரே ஊனம்
சிறகுகள் இல்லாதது தான்.

யுத்த காண்டம்

அன்றைய விடியலும்
நட்சத்திர மொட்டுக்களை
அவிழ்த்துக்கொண்டு
வெளிச்ச உடையக்கட்டிக்கொண்டு
அழகாய்த்தான் விடிந்தது.

ஆனால், சிறிது நேரத்தில்
இரத்தம் தோய்ந்த சிறகுகளுடன்
சன்னல் வழியே வீட்டிற்குள்
உதிர்ந்த்து ஒரு பறவை.

"மனிதர்கள் கொடியவர்கள்.
விளையாட்டிற்காய் வேட்டையாடுபவர்கள்.
என் தாய், என் தந்தை, என் சகோதரர்கள்
இழந்த உயிர்களுக்கும்
நான் இழந்த இரத்தத்திற்கும்
எனக்கு நீதி வேண்டும்.
ஆனால், நீயும் மனிதன் தானே!"

நான் அவசரமாய்ச் சொன்னேன்.
"இல்லை. இல்லை.
நானும் உன்னைப்போலத்தான்"
என்னிடம் திரும்பிக்காட்ட
சிறகுகள் இல்லை.
என் ஊனம் என்னைப்
பழிவாங்கியது.

அந்த பறவை
என்னை நம்பாமலேயே
இறந்து போனது.

அந்த இறந்த பறவையின்
திறந்த வாய்
உலகின் மீதான
நம்பிக்க்கையின்மையக் காட்டியது.

நான் அதை கையில்
எடுத்துவைத்துக்கொண்டு புலம்பினேன்.

இதுவரையில் என்வானத்தில்
நிலாவைப் பலாத்காரம் செய்ய
மேகங்கள் துரத்துவதில்லை.

என் உலகத்தில்
மான்களை சிங்கங்கள்
மரியாதையோடு நடத்துகின்றன.
பசிவந்தால் நதிக்கரை
புற்களைச் சாப்பிடுகின்றன.

மலர்கள் முகந்து பார்க்கப்படுவதற்குமுன்
அனுமதி கேட்கப்படுகின்றன.

என் நதிகளுக்கு கரைகள் இல்லை.
-அவைகள் சிற்றோடைகள் போல
கண்ட இடத்தில் கால்பதித்து
சுதந்திரமாய் நடக்கின்றன.

ஆனால் இன்று,
முதன்முதலாய் என் உலகத்தில்
இரத்தமாய் ஒரு விடியல்..

இதோ இப்பொழுதே
பிடுங்கி எறிகிறேன்
வன்முறை முள்மரத்தின்
முதல் துளி
ர்ச்செடியை..

என் அறையில்
ஆயுதங்களைத் தேடினேன்.
பூக்களைத்தவிர வேறொன்றுமில்லை ..
பூக்களிலும் முள்ளுள்ள பூக்கள்
என் கைவசமில்லை.

கடைசியாய் என்கைக்குக் கிடைத்தது
என் முனைதோய்ந்த பேனா.


பூக்களத்தில்
போதையில் கிடந்த என் பேனா
முதன்முதலாய் போர்களத்தில்.

நான் வீராவேசத்தோடு
வெளியில் பாய்ந்தேன்.
வெளியில் வந்ததும் அதிர்ந்து போனேன்.

எதிரே என் கண்களைக்
குறிபார்த்தபடி சில துப்பாக்கிகள்.

என் இதயத்தைக் குறிபார்த்தபடி
சில ஏகே47கள்.

என் மொத்த தலையைக் குறி
பார்த்தபடி பெரிதாய்ப் பீரங்கிகள்.

கடைசியாய் என் கால்களுக்கிடையே
கண்ணிவெடிகள்.

எனக்கு தெளிவாய்த் தெறிந்தது -
நான் தோற்றுப்போவேனென்று.
அது மட்டுமல்ல -
இறந்தும் போவேனென்று.

அதற்கு முன் உனக்கு சில அறிவுரைகள்.

மயான காண்டம்

ஓ நண்பனே!
உன் பூட்டிய வீட்டிற்குள்
நீ சந்தோஷமாயிரு.

உன் வாசல் கதவுகளைப்
பொதுவாய்ச் சாத்திவை.
ஜெலாட்டின் குச்சிகளின்
கருகிய வாசனை
உன் நுரையீரலுக்கு நல்லதல்ல.

உன் சன்னல் கதவுகளை
எப்பொழுதும் மூடிவை.
பீரங்கிகளின் வெடிச்சத்தம்
உன் செவிப்பறையைக் கிழித்துவிடலாம்.

செய்தித்தாள்கள் தப்பித்தவறியும்
உன் தபால் பெட்டியில்
விழாமல் பார்த்துக்கொள்.
"வயதானவர்களின் கொலைகள்-
பிச்சையெடுக்கும் குழந்தைகள்-"
இதுபோன்ற செய்திகள்
உன் இதயத்திற்கு நல்லதல்ல.

முடிந்தால், ‘டெபோனர்’ ஆயுள் சந்தா
வாங்கிவைத்துக்கொள்.
நடுப்பக்க இறகு உரித்த பறவைகள்
கண்களுக்கு குளிர்ச்சி!

எப்பொழுதாவது
உன் கூரையிடுக்கு
வழியே சுடப்பட்டு விழும்
பறவைகளுக்காக நீ ஒன்றும்
வருந்த வேண்டியதில்லை.

துப்பாக்கிக்குண்டுகளைவிட
வேகமாய்ப் பறக்க முடியாத
பறவைகள் உயிர் வாழ்வதன்
அவசியமென்ன?

‘அட! உன் சமையலுக்கு
இன்று சரியான வரவு!’
உன் பூட்டிய வீட்டிற்குள்
சமையல் செய்து சந்தோஷமாயிரு.

(ந. அருள் முருகன்)

(பின்குறிப்பு: இந்த கவிதை புரியவில்லையென்றால் எனக்கு கடிதம் எழுது. நான் கவிஞன் என்று சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.)

சிதறல்

 

நட்சத்திரங்களுடன்

பூக்காத இரவுகளுக்கு

 உன் கண்களின் வெளிச்சத்தை

ஏற்றிவைக்கலாமா?

எப்படி முடிகிறது?

 

உன்னால் எப்படி முடிகிறது?

உச்சி வானத்தில் நிலா
பெய்துகொண்டிருக்கும்போது
கதவைச் சாத்திக்கொண்டு
வீட்டிற்குள் இருப்பது..

வானம் மழைத்துளிகளால்
மரங்களை ஆசிர்வதித்துக்கொண்டிருக்கும் போது
ரசனையில்லாமல் குடை பிடித்துக்கொண்டு
பாதையில் நடப்பது .  .   .

 ரயில் பயணத்தில் சன்னலுக்கு வெளியே
கையசைக்கும்  குழந்தைகளை
கண்டுகொள்ளாமல் புத்தகத்திற்குள்
புதைந்துகிடப்பது . .  

 

 

page2

இப்பொழுதெல்லாம்

 நட்சத்திரங்கள் பார்த்து
வெகு நாளாகின்றது நன்பனே
நீ எப்பொழுது கடைசியாய்ப் பார்த்தாய்? 

சில நேரம் தோன்றுவதுண்டு
இப்பொழுதெல்லாம் ஊர் சுற்ற வருவதில்லை
போலும் நட்சத்திரங்கள்.

என் பாட்டி இறப்பதற்கு முன்பு
சொல்லிக்கொண்டிருந்தாளாம்
‘வனதேவதைகள் அய்யன் கோயிலுக்கு
வருவதை நிறுத்திவிட்டன ‘வென்று 

 

My first blog page.

I am Arul murugan and I am currently working as a postdoctoral fellow in Universite Libre de Brussels, Brussels, Belgium. I have completed my Ph. D from Indian Institute of Science, Bangalore, India. I am basically from Paramakudi, which is a town near Madurai, the city of temples. Just for fun I used to tell my friends, I am the third important person emerging from that town other two being Padmashree Kamalahasan and Anniyan famous Vikram. I am very much interested in literature and music. Rather, I was interested in pursuing my life as an artist but unfortunately it happened to me to continue my carrier in science. I do computer simulations. In between, when I read something interesting, I too write. May be many of my friends might be murmering the lines ‘கானமயிலாட கண்டிருந்த வான்கோழி..’. By the way, I have accumulated enough materials (if you admit me, I would like to call them as poems or short stories) to waste your time. But my friends like Ananda Ganesh say they are indeed good. But I am matured enough to understand that these words are to encourage me. I suddenly see the image of a mother patting her small son. Anyway, still I feel happy for those words. Thanks Anand ji. That’s the way, I call him.